Friday, August 08, 2025

மகளிர் தினமாம் ! (2025 இந்தியப்பயணம் பகுதி 56 )

  காலை லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டில் வடகறி !
பகல்  ரெண்டுவரை எல்லாமே (புது )  வழக்கம்போல !  ஆனால் இன்றைய விசேஷம், நம்ம சாந்தா ஆயுர்வேத மருத்துவமனையில் மகளிர்தினக் கொண்டாட்டம் !  வாசலில் ரோஜாவுடன் வரவேற்பு.  சிலபல ஆயுர்வேத மருந்து மாத்திரைகளை வச்சு விளக்கம் சொன்னதோடு,  இலவச மாத்திரை மருந்து விநியோகமும் ! 
இதையெல்லாம் ச்சும்மா உக்கார்ந்துருக்கும் நேரத்தில் பார்த்து  அனுபவிச்சதோடு, இலவசங்களைக் கைப்பற்றி வச்சுருந்தார் நம்மவர் !

இன்றைக்குத் தம்பி அனந்து, நம்மை சந்திக்க வர்றதாச் சொல்லியிருக்கார். ஒரு மாசமா இதோ அதோன்னு போனாலும் நேரங்கள் சரியா அமையலை.  நம்மவருக்கும் இன்றைக்குப் பல் சிகிச்சைக்குப் போக வேணும். அவுங்களும் இதே நேரத்துக்குத்தான் வரச் சொல்லி இருக்காங்க. 
கோபாலையும் சந்திக்கணுமுன்னாக் கொஞ்சம் சீக்கிரம் வாங்கன்னு அனந்துக்குச் சேதி அனுப்பினேன்.  இவர் நம்முடைய துளசிதளத்தின் வாசகர். ஆரம்பித்த நாள் முதல் இன்னும் தொடர்ந்து வந்துக்கிட்டுத்தான் இருக்கார்.  வலை தந்த உறவுகளின்படி இவர் நமக்குத்தம்பி.  ஒடம்பிறந்தாளைப் பார்க்க வர்ற மாதிரிதான் எப்பவும்  'சீர்'  கொண்டு வர்றார். 

கோபால் கிளம்பிப்போனதும்.... நாங்க வீட்டுக் கதைகளையெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம்.  மகர் ஸி ஏ முடிச்சுட்டார்.  கேட்கவே  ரொம்ப சந்தோஷமா இருந்தது. 

பல்வேலை முடிச்சு நம்மவர் திரும்பினதும், கிளம்பி நம்ம காப்பிக்கடையில் ஒரு டீ குடிச்சுட்டு, நங்கைநல்லூருக்குப் போனோம். 
  தினமும் ஷாப்பிங் லிஸ்ட் வந்துக்கிட்டே இருக்கு. முடிஞ்சவரை வாங்கிறனும். நம்ம காலத்துக்குப்பின்  இந்தியப் பயணம் வருவாளா என்பதே சந்தேகம்தான். இல்லையோ ! இன்றைய ஷாப்பிங் ரெடிமேட் புடவை.  நம்ம பேட்டை(தி நகரில்) கடைகளில்  தேடிப்பார்த்தும் கிடைக்கலை.  வலையில் தேடினால் இடம் காமிச்சது. போய்ச் சேர்ந்தோம். ஸ்ரீ சாய் ஸில்க்ஸ், 20, மூணாவது மெயின் ரோடு,  தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், சென்னை.

இந்தியாவின் முதல் கடையாம், இப்படி ரெடிமேட் புடவை தயாரிப்பில். மடிஸார் உட்பட எல்லா வகைகளும். 
எக்கச்சக்கமா தைச்சு வச்சுருக்காங்க. நாம் அளவு சொன்னாலும், நாமே புடவை வாங்கிப்போய்க் கொடுத்தாலும் தைச்சே கொடுக்கறாங்க.  ஆனால் இதுக்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை. மகளும் எப்பவாவதுதான் புடவை உடுத்திக்கறாள் , என் உதவி வேணும்  என்பதால்.... ரெடிமேட் கிடைச்சால்  தானே உடுத்திக்கலாம்தானே !
ஏறக்கொறைய நம்மவர் உயரம் இருக்கிறாள் என்பதால்  நம்மவரையே அளவுக்காக நிறுத்தினேன்.ஹாஹா..... வாங்கியது ஒரே ஒரு புடவைதான்.  சரிவந்தால் அடுத்த பயணத்தில் ரெண்டொ மூணோ வாங்கிப்போகலாம். 
கடை ஓனர், வந்து பேசிப் பரிச்சயப்படுத்திக்கிட்டாங்க. அவுங்க உடுத்தி இருப்பதும் ரெடிமேட் ஸாரிதானாம்.  அழகா இருக்கு.  உடம்பும் கொஞ்சம் ஒல்லி என்பதால்  கச்சிதமாப் பொருந்தி இருக்குதான்.  

அவுங்க கடை விளம்பரத்துக்காக யூ ட்யூபில் போட ஒரு வீடியோ க்ளிப் எடுத்துக்கவான்னு கேட்டுட்டு, நம் அனுமதியோடு ஒன்னு ஆச்சு. நம்மவர் ச்சும்மாப் பார்த்துக்கிட்டு நிக்கறாரேன்னு நம்ம செல்லிலும் அதை எடுக்கச் சொன்னேன். 

https://www.facebook.com/reel/781508421076771

கடையில் நல்ல கூட்டம். புடவை கட்டிக்கத்தெரியாத  இப்பத்து சின்ன வயசுப் பெண்கள்,  இப்படியாவது புடவை உடுத்திக்கணும் னு நினைக்கறதுகூட  ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். புடவைக்கு இருக்கும் மவுசு எப்பவுமே போகாது !  அந்த தொழிலும் நசிக்காது என்பதே பெருசு இல்லையா !!!!
அடுத்த விஸிட் நம்ம ஆஞ்சு.....  கோவிலுக்குள் நுழைய முடியாத அளவில் பயங்கரக்கூட்டம் & நெரிசல்.  கோவில் வாசலுக்கு எதிரில் தெருவுக்கு அந்தாண்டை நின்னு ஆஞ்சுவை தரிசனம் செஞ்சுக்கிட்டோம்.  படம் எடுக்கும்போது,  பின்னாலிருந்து யாரோ..... படம் எடுக்கக்கூடாதுன்னார்.  அது சரி. ஆனால் கோவிலுக்குள்ளில் இல்லையோ, அந்த விதி ? தெருவிலுமா ? 

அப்பப் பார்த்து மகளிடமிருந்து இன்னொரு லிஸ்ட்.  சலோ.... கைராசின்னு போய்  சில உடைகள் ஆச்சு.  ராத்திரியில் பாண்டிபஸார் நல்லா ஜிலுஜிலுன்னு இருக்கு !  எதிர்வாடையில் இருக்கும் கீதா கஃபேவில் நமக்கு டின்னர் !
ஹெல்த் & க்ளோவில் எனக்கொரு சின்ன ஷாப்பிங்.  ஸ்நேஹா.... ஓடிவந்து  நலம் விசாரிச்சாங்க.  
வாசலில் கொஞ்சம் பூ. நம்ம குழந்தைக்குத்தான் !  என் ஃபேவ் பூ இல்லையோ !!!
தொடரும்......... :-)     
   

Wednesday, August 06, 2025

கொத்தவால் சாவடி வரை போய் வரலாமா ? (2025 இந்தியப்பயணம் பகுதி 55 )

அப்பெல்லாம்.... (மத்ராஸ்  ) பட்டணத்துக்குச் சுத்திப்பார்க்க   வர்ற   மக்கள்ஸ் எல்லோரும் ரெண்டு காலேஜுகளுக்குக் கட்டாயம் போவாங்க.  படிக்கறதுக்கா ?  ஹாஹா..... வேடிக்கை பார்க்கத்தான். ஒன்னு உயிர்க்காலேஜ் இன்னொன்னு செத்த காலேஜ். ஏன் இப்படி ஒரு பெயர் ? கீழே படம் பாருங்க..... அதேதான் காரணம் ! (படம் , வலையில் இருந்து !நன்றி !)  
ரொம்பப்பாவம் செஞ்சவங்களைக் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரையில் போட்டு  பொரிச்சு எடுப்பாங்களாம். எனெக்கெப்படித் தெரியும் ?  மெட்ராஸ் செத்தகாலேஜுலே எமலோகம் சீன் ஒன்னு  இருக்கும். பார்த்துருக்கேன்.  நரகத்துக்குப் பயந்தே சனம் பாவம் செய்யறதைக் குறைச்சுக்கிட்டு இருந்தது !
மேலே படம்....  வலையில் இருந்து, நன்றி !

 ஒரு பத்துப்பதினைஞ்சு வருசங்களுக்கு முன், மகளின் இந்தியப்பயணத்தில்,  இதைக் காமிக்கறதுக்குன்னே அந்த செத்த காலேஜுக்குப் போனால் நரக ஸீனைக் காணோம்.  எடுத்துட்டாங்க போல !  அதான் குளிரு விட்டுப்போயிருக்கு !  நரகமே இல்லையேன்ற  நெனப்பில்.... என்னென்னெவோ நடந்துக்கிட்டு இருக்குல்லே ? 


லோட்டஸில் இருந்தால்...   காலை எட்டரைக்குப்போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்குவோம். ( இப்பவும் நான் ரொம்ப மிஸ் செய்வது லோட்டஸின் ப்ரேக்ஃபாஸ்ட்தான். ) 
பத்து மணிக்கு என் டைம், ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் சாந்தா ஹாஸ்பிடலில்.  இடையில் ரெண்டு வாரம் லீவில் கோவில்கள் சுத்திட்டு வந்துருக்கேன் .  வழக்கம்போல் முதலில் ரத்த அழுத்தம் பார்ப்பாங்க. டென்ஸி, செக் பண்ணி முடிச்சதும், 'எத்தரையா ? 'ன்னு நான் கேட்பதும், 'நோர்மல்தன்னே... குழப்பமொன்னும் இல்லா' ன்ற பதிலும்  வழக்கம்போல். சிகிச்சை முடிஞ்சு வெளியில் வந்ததும் திரும்ப ஒருமுறை ரத்த அழுத்தம் பரிசோதிப்பது பதிவு. 
(மகளிர் தினத்துக்கு  டிஸ்கவுண்ட் கூப்பான் எல்லாம் போட்டுருக்காங்க !) 

லோட்டஸுக்குப் பக்கம்தான் (வெறும் 350 மீட்டர்) என்றாலும்  நடக்க முடியாதுன்னு ஒரு ஆட்டோ எடுத்துக்குவோம்.  நம்மவர், அங்கே வரவேற்பில் உக்கார்ந்து லோட்டஸில் இருந்து கொண்டுவந்த தினசரியைப் படிச்சுக்கிட்டே ஒரு மணி நேரம் போக்கிருவார். 'அறைக்குப் போயிட்டு  நிதானமா வாங்க'ன்னாலும்...... கேக்கறதில்லை. சில சமயம் வாசலையொட்டி இருக்கும் பழமுதிர் நிலையத்து ஷாப்பிங் முடிச்சுக்குவார்.  முக்கியமாத் தயிர், வாழைப்பழம், வெள்ளரிக்காய் இப்படி.....
சிகிச்சை அறைக்குள் போனால்....  சின்ன சைஸ் எண்ணெய்க்கொப்பரையில் எனக்கான தைலம் காய்ச்சிக்கிட்டு   இருக்காங்க.  கொஞ்சமாத்தான் பாவம் பண்ணியிருக்கேன் போல !

எண்ணெய் நல்லாச் சூடானதும் மருந்து  மூட்டைகளை அதில் முக்கி எடுத்து ஆளுக்கு ஒருபக்கமா நின்னு நம்ம கால்களில்  தேய்க்கறாங்க. முதலிலேயே சூடு ரொம்ப இருந்தால் சொல்லுங்கன்னதால், அப்பப்ப 'ஐயோ சூடு சூடு' ன்னு சின்னதாக் கத்திக்கிட்டு இருப்பேன். அவுங்க சொல்றபடி நேராகப்படுத்தும், குப்புறப்படுத்தும், ஒருக்களிச்சுப்படுத்துமா, என் கால்களை சூட்டுக்கு ஒப்புக்கொடுத்துட்டேன். சுருக்கமாச் சொன்னா  காலை பார்பக்யூ பண்ணிருவாங்க.  இதுலே எண்ணெய்  வழிஞ்சு,  அந்த தோல்மெத்தையில் பரவி நம்ம உடம்பை நனைச்சுக்கிட்டு இருக்கும்.  எந்தொரு ஸல்யம்? 
மொத்தம் ஒரு மணி நேரம் கால்களுக்கு ஆயில்  மஸாஜ். அப்புறம்  ஒரு மருந்துப்பொடியை ஆப்பிள் ஸைடர் வினிகரில் கலக்கிக் கொதிக்கவச்சு முழங்கால்களுக்குப் பத்துப்போட்டு விடுவாங்க.  ஆச்சு.  ஆட்டோவில் அறைக்குத் திரும்பிருவோம்.  ரெண்டு மணி நேரம்  கட்டோடு இருக்கணும். அப்புறம் எல்லாத்தையும் சுத்தம் செய்து கழுவிட்டு, ஒரு குளியல் போட்டால் அன்றைய சிகிச்சை முடிஞ்சது.   எப்படியும்  பகல் ரெண்டு  மணி ஆகும்.  அதுவரை   வலை மேய்தல்.  படுக்கையில்  எண்ணெய்க்கறை படியாமல் இருக்க செய்தித்தாள்  போட்டுக்குவேன்.  ஹௌஸ் கீப்பிங் மேனேஜரும்,  அவருடைய உதவியாளர்களுமா வந்து அறையைச் சுத்தம் செஞ்சுட்டுப்போறதும் உண்டு.   மணி ரெண்டு ஆச்சா ? இனி நம்ம வேலைகளைப் பார்க்கலாம். 
பகல் லஞ்சுக்குத்தான் வெளியே போக முடியறதில்லை.  பழங்களும், காய்களுமா இயற்கை உணவு !!!  சில நாட்கள். ரூம் சர்வீஸில் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து  சௌத் இண்டியன் தாலி மீல்ஸ்  வாங்கிக்கறதும் உண்டு.  நம்ம தேவை அனுசரிச்சு விஜியைக் கூப்பிட்டுக்கறோம். 

இந்த முறை பயணத்தில்  எனக்கு சிங்கையில் தங்கல் இல்லை. வழக்கமாச் சில மளிகை சாமான்களை (!) சிங்கை முஸ்தாஃபாவில் வாங்கிப்போவேன். அதனால்.... இங்கே சென்னையில்  வாங்கிக்கலாமுன்னு நம்மவர் வலையில் தேடிக் 'கொத்தவால் சாவடியில் கிடைக்கிறது. போய் வாங்கிக்கலாம்'னு சொன்னார்.....  நான் முதலில் கொஞ்சம் நடுங்கிப்போயிட்டேன்.  அகலமே இல்லாத சின்னத்தெருக்களில்  அலைஞ்சு திரிஞ்சு காளிகாம்பாள் கோவில் போன அனுபவம் எல்லாம் நமக்கு இருக்குல்லே ? 

https://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_19.html

கூகுள் மேப் வழிகாட்ட,  கொத்தவால் சாவடிக்குப் போறோம்.  நம்ம விஜி , இளங்கன்று என்பதால் பயமில்லாமல் ஓட்டிக்கிட்டுப்போறார். எதிரில் சாமான்கள் ஏற்றி இறக்கும் ட்ரக் வகை வண்டிகள்  வரும்போது சர்க்கஸ்தான் ! இந்தக் கோயம்பேடு மார்கெட் வருமுன் கொத்தவால் சாவடிதான்  மெட்ராஸின் முக்கிய சந்தை.  வெளியூர்களில் இருந்து சரக்கு கொண்டுவரும் லாரிகளின் நடமாட்டம் எக்கச்சக்கம். மற்ற சிறு வியாபாரிகள் எல்லாம் இங்கே வந்துதான் பொருட்களை வாங்கிப்போய் விற்பனை செய்வார்கள். 



இப்பவும் அந்த ஏரியாவில் மொத்தவிற்பனை வியாபாரம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு போல ! காய்கறிக் கடைகள் அங்கங்கே...... நாம் தேடிப்போன கடையின் பெயர் ஸாஃப்ரான் ஹோம்.....   கிரானா  பவன், ஆதியப்ப நாய்க்கன் தெரு, சௌகார்பேட்டை.
தேடிவந்தது கிடைச்சது. குங்குமப்பூ ! கூடவே கொஞ்சம் நட்ஸ் வகைகள். நல்ல பெரிய சைஸ் பிஸ்தாவும் கிடைச்சது.  முக்கால் மணி நேரத்துக்குள் இந்தப்பகுதியில் நுழைஞ்சு, போன வேலையை முடிச்சுக்கிட்டு வெளியே  வந்துருக்கோம் !  பெரிய சாதனைதான் இது !  விஜியைப் பாராட்டினேன் !

சென்ட்ரலாண்டைப் பொதுமருத்துவமனை அலங்கார முகப்போடு இருக்கு !  இதே அளவு முன்னேற்றம் உள்ளேயும் இருக்குமுன்னு நினைக்கிறேன்.
நாம் நியூஸிக்குத் திரும்பும் நாள் நெருங்கிக்கிட்டு  இருக்கு. இன்னும் ஒரே ஒருவாரம் தான் இங்கே என்பதால்.....  வாங்கிப்போகும் பொருட்களுக்கானக் கடைகளுக்குப் போகத்தான் வேணும். ஷாப்பிங் ஓரளவுக்கு முடிஞ்சால்தான் லக்கேஜ் எடை பார்த்து ஆவன செய்யவேணும்.  எல்லாம் ஒன்னோட ஒன்னு தொடர்பில் இருக்கும் வேலைகள்தான்.  இதுலே பகல் ரெண்டு வரை சிகிச்சை என்பதால்  தினமும் கிடைக்கும் அரை  நாளில் சோம்பல் படாமல் இருக்கவேணும்.....  ப்ச்.....
சலோ  மயிலை.... விஜயா ஸ்டோர்ஸ். நமக்கு ஆகி வந்த இடம்.  கொஞ்சம் சாமி சமாச்சாரங்கள்  (அலங்காரம் ! ) வாங்கினதும், நம்ம காப்பிக்கடையில் டீ குடிச்சுட்டு, லோட்டஸ் திரும்பினோம்.  கொஞ்சநேர ஓய்வுக்குப்பின்  டின்னருக்கு எங்கே போகலாமுன்னு சின்னதா யோசனை செஞ்சு கீதம் போனோம். 
                
இந்த வாரம் தோசை வாரமாம் ! நமக்கு தோசையே போதும். விஜி, சப்பாத்தின்னார் !
கீதம் வாசலில் நம்ம சென்னை !

லோட்டஸ் திரும்பியபோது மணி ஒன்பது. 

இனி தினமும் அநேகமா இப்படித்தான் இருக்கப்போகுது......
     
தொடரும்........... :-)



Monday, August 04, 2025

என்ன ஸ்டைலுமா............... (2025 இந்தியப்பயணம் பகுதி 54 )

புள்ளையார் மாதிரி  மனுஷனுக்கு இணக்கமான ஒரு சாமி இல்லவே இல்லைன்னு எனக்குத் தோணும்.  என்ன வேஷம் கட்டினாலும் 'நான் ரெடி'ன்னுருவார்.  மனுஷனின் கற்பனைக்கு  ஈடு கொடுக்கும் கில்லாடி ! 
 ஊரைச்சுத்திவந்ததில் ஏகப்பட்ட சிற்பங்கள் செய்யும்/ விற்பனை  நிலையங்கள்.  புள்ளையார் விதவிதமா இருக்கார்.  கருங்கல் சிலை என்றாலும்  உடலில் அங்கங்கே கரும்பளிங்கு மினுமினுப்பை எப்படிக்கொண்டு வர்றாங்கன்னு தெரியலை.   எனக்கு ஒன்னு வாங்கிக்கணும் என்ற தீராத ஆசை நடக்கச் சான்ஸே இல்லை.....  ஹூம்...


பழைய  கலங்கரை விளக்கத்துக்குப்பக்கம் இருக்கும் பகீரதன் தவத்தின் மாதிரியைப் பார்த்த கையோடு,  'அர்ஜுனன் தபஸ்' ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்  முழுசுமாய் செதுக்கி முடிக்கப்பட்டப் பெரும்பாறை சிற்பங்களையும் ( இது கோவிலுக்குப் பக்கம்தான். ஏகப்பட்ட தீனி வண்டிகள் நின்னதால்.... நம்மவர் இறங்கிப்போய் க்ளிக்கிட்டு வந்தார்) பார்த்துட்டுக் காரில் இருந்தே சிலபல க்ளிக்ஸ் ஆனதும் சலோ சென்னைன்னு கிளம்பிட்டோம்......


கிழக்குக்கடற்கரைச் சாலை அருமை! ஆனால் எல்லாம்  சென்னையைச் சமீபிக்கும் வரைதான்.... ஆர் கே கன்வென்ஷன் சென்டரைத் தாண்டியவுடன் கூட்டமும் நெரிசலும் ஆரம்பம். மத்யான நேரம் என்பதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லைன்னு விஜி சொல்லிக்கிட்டு வந்தார்.
சென்னை/ மெட்ராஸ் பொறுத்தவரை எனக்கென்னமோ லவ் & ஹேட் உணர்வுதான்.  ஆனால் தெரியாத தேவதைகளை விடத் தெரிஞ்ச பேய்கள் பரவாயில்லை, கொஞ்சம்  ஒத்துப்போகலாம் என்பதுதான் உண்மை.

லோடஸ் வந்து சேரும்போது மணி ஒன்னு அம்பது.  அறைச் சாவி நம்மிடமே நின்னுபோச்சுன்றது ஞாபகப்படுத்தப்பட்டது..... அதையே திரும்பச் செயல்படவச்சுக் கொடுத்தாங்க.  பெட்டிகளை வச்சுட்டுக் கிளம்பிப் பகல் சாப்பாடு,  ஜி என் சாலை சங்கீதாவில்.  பார்க்கிங் தேடவேணாம்.  அவுங்களே கொண்டுபோய் நிறுத்திட்டு, நாம் சொன்னதும் திரும்பக்கொண்டு வந்துடறாங்க. 


நம்மவருக்கும் விஜிக்கும் தாலி. எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம்.  லோட்டஸ் திரும்பி வந்ததும்  விஜியை வீட்டுப்போகச் சொன்னோம். அம்மா அப்பா காத்திருப்பாங்கதானே ? சாயங்காலம் வெளியே போக ஒரு  ஆட்டோ பிடிச்சால் ஆச்சு.  ஆனால்.....  விஜிக்கு சம்மதம் இல்லை.  ஃபோன் பண்ணுங்கம்மா  .....  வந்துடறேன்னுட்டார்.

அறைக்குப்போய் முதல் வேலையா, பாலராமரை வெளியில் எடுத்து அலமாரியில் வச்சதும், சிரிச்சமாதிரி தோணுச்சு.  ரெண்டு வாரமா பபுள்ராப்லே கட்டிவச்சுருந்ததுக்கு..... மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். சாயங்காலம் வெளியே போகும்போது கொஞ்சம் பூ வாங்கிவந்து சமர்ப்பிக்கணும்.  எல்லாம்  இங்கே இருக்கும்வரைதான். நியூஸி போனால்.....  மல்லிகை எல்லாம் இல்லையாக்கும்.....
சாயங்காலம், ஆறுமணிக்குக் கிளம்பிப்போய் டெய்லர்  கடை. பேரனுக்குத் தைக்கக் கொடுத்துருந்தவை எல்லாம் தயார். இந்த டெய்லர் நல்லாவே தைக்கிறார். ஜெண்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்.  நியூ ஸ்டைல் டெய்லர்ஸ்னு கடைப்பெயர். சௌத் உஸ்மான் ரோடு. ஹொட்டேல் அருணாவுக்கு எதிர்வாடை.  லேடீஸுக்குத் தைக்கறீங்களான்னு கேட்டால்..... ஆமாம்ன்னார்.  சரி ஒரு செட் கொடுத்துப்பார்க்கலாம்.     
நாம் ஏற்கெனவே சிலமுறை வந்துருந்தாலும்,  டெய்லர் கடைக்குப்பக்கம்  இருந்த  ஒரு சமாச்சாரத்தைக் கவனிக்கலை. அப்படிக் கவனிக்க முடியாத வகை இல்லைதான்.  மூடி இருந்துருக்கு போல !  பழக்கமான சத்தம்..... சின்ன வயசு நினைவுகளை மீட்டெடுத்தது.  
இந்த முறை  எனக்குக் கைராசியில்தான் அமைஞ்சது என்பதால்  பாண்டி பஸாருக்கு வந்து ஒரு செட் துணிகள் வாங்கினேன். நாளைக்குப் புது டெய்லரிடம் கொடுத்துப் பார்க்கலாம்.  வாசலில் வா வா என்று கூப்பிட்டது மாம்பழம். சீஸன் இல்லைன்னாலும் ஆசை விடுதா என்ன ? 

கொஞ்சம் பூவும் பழமுமா வாங்கிவந்து குழந்தைக்குக் கொடுத்தாச்சு. ராச்சாப்பாட்டுக்கு வெளியே போகலை.  

நாளை முதல் ஆயுர்வேத சிகிச்சைக்கு மீண்டும் போகவேணும். 

தொடரும்........... :-)